search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மெகாபந்தன் கூட்டணி"

    மத்திய சென்னை, சென்னை வடக்கு, மதுரை, திருச்சி, திருவள்ளூர் பாராளுமன்ற தொகுதிகளை சேர்ந்த பா.ஜ.கவினருடன் பிரதமர் மோடி இன்று காணொலி மூலம் உரையாற்றினார். #Modi #Mahagathbandhan #RichDynasties
    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் மத்தியில் ஆட்சியை தக்கவைத்து கொள்ள பா.ஜ.க.வும் பறிகொடுத்த ஆட்சியை மீண்டும் கைப்பற்ற காங்கிரஸ் கட்சியும் முனைப்பு காட்டி வருகின்றன.

    அனைத்து மாநிலங்களை சேர்ந்த மாற்று கட்சிகளை ஒன்றுதிரட்டி மாபெரும் கூட்டணி அமைத்து இந்த தேர்தலில் பா.ஜ.க.வை வீழ்த்தும் முயற்சியில் ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு ஒருபுறம் ஈடுபட்டு வருகிறார்.

    இதற்கிடையில், பா.ஜ.க.வின் பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தின் முதல்கட்டமாக உத்தரப்பிரதேசம் மாநிலம், வாரணாசி நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று பேசினார்.

    மேலும், மாநிலவாரியாக பா.ஜ.க. நிர்வாகிகளையும், பூத் ஏஜென்ட்டுகள் மற்றும் தொண்டர்களுடன் காணொலி மூலம் பேசி தேர்தல் பணிகளுக்கு தயாராகுமாறு ஆலோசனை வழங்கி வருகிறார். அவ்வகையில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி நிர்வாகிகளுடனான காணொலி ஆலோசனை கூட்டம் சமீபத்தில் நடந்து முடிந்தது.

    இதைதொடர்ந்து, நாட்டின் தென்மாநிலங்களில் பா.ஜ.க.வுக்கு பலம் சேர்க்கும் வகையில் இப்பகுதிகளில் மோடி அதிகமான பிரசார கூட்டங்களில் கலந்துகொண்டு பேசும் வகையில் அவரது சுற்றுப்பயணம் தொடர்பான திட்டங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.



    தென்மாநிலங்களில் முதல்கட்டமாக வரும் ஜனவரி மாதம் 6-ம் தேதி கேரள மாநிலத்தில் சபரிமலை ஐயப்பன் கோவில் அமைந்துள்ள பத்தினம்திட்டா மாவட்டத்தில் நடைபெறும் தேர்தல் பிரசார கூட்டத்தில் மோடி உரையாற்றுகிறார்.

    பின்னர், ஜனவரி 27-ம் தேதி திருச்சூர் மாவட்டத்தில் நடைபெறும் பா.ஜ.க. இளைஞர் அணி மாநாட்டில் பங்கேற்க வருகிறார். இந்த பயணத்தின்போது தமிழ்நாட்டில் ஒரு தேர்தல் பிரசார கூட்டத்தில் மோடி உரையாற்றும் வகையில் ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக பா.ஜ.க. வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

    இந்நிலையில், மத்திய சென்னை, சென்னை வடக்கு, மதுரை, திருச்சி, திருவள்ளூர் பாராளுமன்ற தொகுதிகளை சேர்ந்த பா.ஜ.கவினருடன் பிரதமர் மோடி இன்று காணொலி மூலம் உரையாற்றினார்.

    பா.ஜ.க.வுக்கு எதிராக இணையும் மெகா கூட்டணி அதிகாரத்தை கைப்பற்ற துடிக்கும் செல்வந்தர்கள் ஒன்று சேர்ந்து தனிப்பட்ட நலன்களுக்காக அமைக்கப்படும் புனிதமற்ற கூட்டணி என இன்றைய கலந்துரையாடலில் மோடி குற்றம்சாட்டினார்.

    முன்னர் காங்கிரசின் அராஜகத்தை வீழ்த்துவதற்காகவே மறைந்த ஆந்திரா முன்னாள் முதல் மந்திரி எம்.டி.ராமாராவ் தெலுங்கு தேசம் என்ற கட்சியை ஆரம்பித்தார். ஆனால், அக்கட்சியின் இப்போதைய தலைவர் காங்கிரஸ் கட்சியுடன் கைகோர்க்க துடிக்கிறார்.

    வேறுசிலர் ராம் மனோகர் லோகியாவின் பெயரை சொல்லி கட்சி நடத்துகின்றனர். ஆனால், ராம் மனோகர் லோகியாவே காங்கிரஸ் கட்சியையும் அதன் சித்தாந்தத்தையும் எதிர்த்தவர் என்பதை மறந்து விட்டனர்.

    இந்த கூட்டணியில் இருக்கும் பல கட்சி தலைவர்கள் காங்கிரஸ் அரசால் நெருக்கடி நிலை காலத்தில் கைது செய்து சித்திரவதைக்குள்ளானவர்கள். இப்படிப்பட்டவர்கள் காங்கிரசுடன் அமைக்கும் கூட்டணி மக்களுக்கான கூட்டணியல்ல. சித்தாந்தங்களின் அடிப்படையிலான கூட்டணியல்ல. அதிகாரத்தை கைப்பற்ற துடிக்கும் சுயநலவாதிகளின் கூட்டணி என்பதை நாம் மறந்து விடக்கூடாது.

    காங்கிரஸ் கட்சியின் எதேச்சாதிகாரம் யாரையும் விட்டு வைத்ததில்லை. மக்களின் ஆதரவுடன் தேர்தலில் வெற்றிபெற்று  தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர். ஆட்சியை 1980-ம் ஆண்டு கலைத்த கட்சிதான் காங்கிரஸ் என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும் என்றும் மோடி குறிப்பிட்டார். #Modi #Mahagathbandhan #RichDynasties
    ×